ஊழல் வளர்க்கும், வளரும் விதமும், தொழிலாக விட்ட நிலையும், ஆதரிக்கும் போக்கும்: தமிழகத்தின் நிலை (2)
பெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை ஏப்ரல் 2016: மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள பெட்டிக் கடையில் ₹500க்கு ஜாதி சான்றிதழ்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்[1]. அவர்களிடம் இருந்து போலி சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்திய போலி முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். அபிராமபுரத்தில் மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் எதிரே, ராஜா முத்தையாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி மஞ்சுளா (41) என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் தேனாம்பேட்டை கணேசபுரத்தை சேர்ந்த குமார் (43) என்பவர் புரோக்கராக உள்ளார். தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக இருப்பதால் குமார் சட்டவிரோதமாக போலியாக ஜாதி சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்களை தயாரித்து மஞ்சுளாவின் பெட்டிக்கடையில் வைத்து ₹500க்கு விற்பனை செய்து வந்துள்ளார்[2]. இதுகுறித்து வந்த ரகசிய தகவலின் பேரில், மயிலாப்பூர் வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் கண்காணித்தபோது, புரோக்கராக உள்ள குமார் ஜாதி சான்றிதழ்கள் பெற தாசில்தார் அலுவலகம் வரும் பெற்றோர்களிடம் பேசி ₹500க்கு சான்றிதழ்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வட்ட வருவாய் ஆய்வாளர் சந்திரசேகரன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் குமார் மற்றும் மஞ்சுளா மீது புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் குமார் வீடு மற்றும் மஞ்சுளாவின் பெட்டி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குமார் வீட்டில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது.
10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ஸெய்தவனின் வேலை: மேலும் மயிலாப்பூர் தாசில்தாரின் போலி கையொப்பம் கொண்ட முத்திரைகள், அரசு முத்திரைகள் மற்றும் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மஞ்சுளா பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 போலி சான்றிதழ்களும் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதையடுத்து குமார் மற்றும் மஞ்சுளாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: குமார் கடந்த 10 ஆண்டுகளாகவே மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கராக வேலை ெசய்து வருகிறார். இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் குமாரைத்தான் தேடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குமார் போலியாக ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்களை தயாரித்து முதலில் தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தார். மேலும், இதில் அரசு அலுவலகர்களின் உடந்தையும் இருப்பதாக சொல்லப் படுகிறது. ஏனெனில், தயாரிக்கப் பட்ட சீல்கள் அவ்வபோது பணியில் இருப்பவர்களின் பெயர்கள் சகச்சிதமாக இருந்தன. கையெழுத்தும் அதேபோல்ச் இருந்தன. இவையெல்லாம் ஒரே ஆள், ஒரே இடத்தில் இருந்து கொண்டு செய்ய முடியாது.
முதலில் ரகசியமாக விற்பனை செய்து, பிறகு பெட்டி கடையில் வைத்து விற்பன: எந்த பள்ளி மற்றும் கல்லூரிகளும் போலி ஜாதி சான்றிதழ்களை அடையாளம் கண்டுபிடிக்காததால் அதிகளவில் போலி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். முதலில் ரகசியமாக விற்பனை செய்து வந்த குமார் பின்னர் தாசில்தார் அலுவலகத்துக்கு எதிரே பெட்டி கடை வைத்துள்ள மஞ்சுளாவிடம் பேசி கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கு உனக்கு தருவதாக குமார் தெரிவித்துள்ளார். இதுபோல் கடந்த 10 ஆண்டுகளாக குமார், தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள மஞ்சுளா பெட்டிக் கடையில் வைத்து ஆயிரக்கணக்கில் போலி ஜாதி சான்றிதழ்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கடந்த 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குமார் மற்றும் மஞ்சுளாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?: போலி சான்றிதழ் மூலம் கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நசரத்பேட்டையில் இயங்கி வரும் திருப்பெரும்பூதூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் விற்பனையாளராக செங்குட்டுவன் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காட்டுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர் 5.08.1992ல் கூட்டுறவு சங்கத்தில்10ம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் இவர் காட்டுபாக்கத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாதிரி போலி சான்றிதழ்களை வாங்கியுள்ளார். உண்மையில் இவர் காட்டுபாக்கம் பள்ளியில் எந்த வகுப்புமே படிக்கவில்லை, மேலும் அந்த பள்ளியில் அந்த ஆண்டில் படித்தவர்கள் பட்டியலிலும், வருகைபதிவேட்டிலும், அவரது பெயர் இல்லை என அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஊழியர்கள் சார்பில் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க இணைபதிவாளர், அரசு செயலாளர் கூட்டுறவு துறை, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகாரின் பெயரில் இதுவரை இவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சோ.மதுமதி ஐ.ஏ.எஸ்., அதிகாரி தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்கங்களின் எந்த பிரிவிலும் ஊழல், தவறு நடந்திருந்தாலும் கண்டுபிடிப்பதற்கு அரசு தனியாக ஒரு விஜிலென்ஸ் குழு அமைத்துள்ளதாகவும், இந்த கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் தவறு செய்யப்பட்டுள்ளார்கள் என பத்திரிக்கை மூலமாகவோ, புகார் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இதுவரை செங்குட்டுவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[3].
போலி சான்றிதழ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக மகளிர் அணி நிர்வாகி சண்முக சுந்தரி, ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மூணு மாசத்தில் வக்கீல், என்ஜீனியர் சர்டிபிகேட் கொடுக்கப்படும் என விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்த சண்முக சுந்தரி இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி, கணேஷ் பிரபு, அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன
வக்கீல்-எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் பாராமெடிக்கல் கோர்ஸ் சான்றிதழ்கள் விற்பனை: வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் படிப்புக்கான சான்றிதழ்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சுந்தரி தயாரித்து கொடுத்திருப்பது அம்பலமானது.. பார்கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்த போது, சென்னையை சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் அளித்திருந்த எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் தட்சிணா மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அதிரடியாக களத்தில் இறங்கி, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் கோவை காந்திபுரம் 3-வது தெருவில் ‘‘ஹைமார்க் எஜிகேஷன் இன்ஸ்டி டியூசன்” என்ற பெயரில் சண்முக சுந்தரி போலி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மிகவும் ‘ஹைடெக்’காக காட்சி அளித்த இந்த நிறுவனத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலான இன்டர் நெட் வசதியும் சண்முக சுந்தரியின் அலுவலகத்தில் இருந்துள்ளது.
மோசடிக்கு ஹை-டெக் அலுவலகம்: இங்கிருந்த படியே இணையதளம் மூலமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசி மோசடி கும்பல் போலி சான்றிதழ்களை தயாரித்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் போலி சான்றிதழ்கள்தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சண்முக சுந்தரி கோவையை மையமாக கொண்டு செயல்பட்ட தனது நிறுவனம் மூலம் விளம்பரங்கள் கொடுத்துள்ளார். அதில் ‘‘3 மாதங்களில் பட்டப்படிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்கள் வாங்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் போன் நம்பர்கள் மற்றும் முகவரியையும் இடம் பெற செய்துள்ளனர். இதைப்பார்த்து பலர் போட்டி போட்டுக் கொண்டு சண்முக சுந்திரியின் போலி நிறுவனத்தில் விண்ணப் பித்துள்ளனர். அவர்களிடம் ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, சண்முக சுந்தரியும், அவரது கூட்டாளிகளும் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.
ரவுடிகளுக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்: 8ஆம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்து கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் போதும், 3 மாதத்தில், சண்முகசுந்தரி, போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து விடுவார். சென்னையில் மட்டும் சுமார் 10 பேர் வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. போலி சான்றிதழ்களை பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ரவுடிகள் சிலரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ஒருவனும் இந்த சான்றிதழை பெற்றுள்ளான். இவன் மீது வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 1000 பேர் வரை இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்த்துள்ளனர். போலி பொறியியல் சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமும், பாராமெடிக்கல் போலி சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமம் தெரிய வந்துள்ளது.
ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண்[4]: இது போல் உருது மொழி சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டுள்ளன. உருதுமொழி சான்றிதழ் எதற்கு பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, அரபு நாடுகளில் வேலைக்கு சேருவோருக்கு உருது மொழி சான்றிதழ் அவசியம் என்பதால் பலர் போலியாக பெற்றுள்ளனர். நைஜீரிய நாட்டவர்களும் போலி உருது சான்றிதழ்களை பெற்று உள்ளன. எனவே இந்த போலி சான்றிதழ்களை தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்றார். கோவை தவிர ஆலந்தூரிலும் போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பலின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அங்கும் விசாரணை நடந்து வருகிறது. இப்படி போலி சான்றிதழ் தயாரித்து மோசடி ராணியாக வலம் வந்த சண்முக சுந்தரிக்கு டெல்லியை சேர்ந்த மோசடி ஆசாமி அமித்சிங் மிகவும் உறுதுணையாக இருந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது[5]. இதையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் அமித்சிங் மற்றும் போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நாளை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார்கள். காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், போலி சான்றிதழ் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© வேதபிரகாஷ்
31-10-2017
[1] தினகரன், மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரே துணிகரம் பெட்டிக்கடையில் ரூ.500க்கு ஜாதி சான்றிதழ் விற்பனை: பெண் உட்பட 2 பேர் ைகது, 8/4/2016 2:05:09 PM
[2]http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=609207
[3] Monday, 24 Jul, 5.46 am
[4] தமிழ்.ஒன்.இந்தியா, தீவிரவாதிகள், ரவுடிகளுக்கு போலி சான்றிதழ்… கோடிக்கணக்கில் சம்பாதித்த சண்முகசுந்தரி, Posted By: Mayura Akilan, Published: Monday, April 13, 2015, 18:15 [IST]
[5] https://tamil.oneindia.com/news/tamilnadu/shanmugasundari-issued-bogus-law-certificate-within-three-months-224653-pg1.html