Archive for the ‘புதிய அரசியல்வாதிகள்’ Category

குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்!

நவம்பர் 5, 2010

குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம், உண்ணாவிரதம், புதிய அரசியல்வாதிகள், சுற்றறிக்கைகள்!

ஒழுக்கம், தார்மீகம், தார்மீக மதிப்புகள், தார்மீக உணர்வுகள் தேவை: இப்படி சொல்ல ஏன் வெட்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. தனிமனித ஒழுக்கம் மிகவும் அவசியம் என்பதனை வலியுறுத்த ஏன் தயங்குகிறார்கள் என்று புரியவில்லை. எப்படி கணவன் தன் மனைவி ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் அல்லது மனைவி தன் கணவன் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைப்பானோ/ளோ அதேபோலத்தான் மற்ற விஷயங்களும். தமிழ்-தமிழ் என்று பேசிக்கொண்டு, திருவள்ளுவர்-திருக்குறள் என்று டமாரம் அடித்துக் கொண்டு, அவர் சொல்வதை கேட்கமாட்டோம் என்பது என்ன தமிழரது ஒழுக்கம் என்று தெரியவில்லை.

இன்னும் கூட ஒழுக்கம் தேவை, ஒழுங்கீனத்தினால் தான் சமூகத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன[1]. சட்டத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை என்பதை செய்திகள் தாராளாமகாவே எடுத்துக் காட்டியுள்ளன. தார்மீகம் (morality), தார்மீக மதிப்புகள் (Moral values), தார்மீக எண்ணங்கள் (moral thinking) மக்கள் மனங்களினின்று வெகுவாக அகன்று விட்டன எனலாம். பொதுவாக இன்று நியாயம், தர்மம் போன்றவற்றின் சிந்தனைகள் மனங்களினின்று அகன்றது இல்லாமல், அவற்றை மற்றும் அதைப்பற்றிப் பேசுபவரை கேலிசெய்வது, கிண்டல் செய்வது, தூஷிப்பது போன்ற போக்கு அதிகமாகி இருக்கிறது. சினிமா இதற்கு பெரிய பங்கு வகித்துள்ளது. நகைச்சுவை என்ற பெயரில் அநியாயங்களை, ஆபாசங்களை, அநாகரிகங்களை, அநாச்சாரங்களை, எல்லாவிதமான அக்கிரமங்களையும், பாவங்களையும், குரூரங்களையும் நியாயப்படுத்து விட்டார்கள். இதை 24 x 7 ரீதியில் டிவிக்களில் திரும்ப-திரும்ப காட்டி மக்களின் மனங்களையும் மரத்துப்போக செய்து விட்டார்கள். ஊடகங்களும் சமமாக அதற்கு பொறுப்பேற்றவர்கள் ஆகிறார்கள்.

ஆக இதற்கு மாற்று என்ன தேவை? மறுபடி அத்தகைய தார்மீகம் (morality), தார்மீக மதிப்புகள் (Moral values), தார்மீக எண்ணங்கள் (moral thinking) மக்களுக்கு வரவேண்டும் என்றல் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்காமல், தாங்கள் – அரசு, அரசாங்கள், அதிகாரிகள், முதலியோர் எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் தான் சி/சுற்றறிக்கை விட்டு ஏசி ரூம்களில் தூங்க ஆரம்பித்து விடுகின்றனர்.

*         ஊடகங்களை ஒழுங்கப் படுத்தப்போவது யார்?

*         டிவி செனல்களில் நல்ல விஷயங்களை எவ்வாறு கொடுக்கப் போகிறார்கள்?

*         நல்லத் திரைப் படங்களை எப்படி எடுக்கப் போகிறார்கள்?

*         மக்கள் எப்பொழுது எப்படி மாறப்போகின்றனர்?

*         மக்கள்தாம் இத்தகைய சினிமாக்களை விரும்பிகின்றனர், அதனால்தான், நாங்கள் எடுக்கிறோம் என்ற நிலை எப்பொழுது மாறப்போகிறது?

*         படத்திற்கு தமிழ் பெயர் வைத்தால் வரிசலுகை என்று ஒழுங்கீனத்தை வியாபாரமாக்குவது இனிமேலாவது தடுக்கப்படுமா?

இதற்கு பதில் தேடாமல், பலர் பலவிதமாக கிளம்பி விட்டார்கள்!

குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம் .ஜே.கே., சார்பில் 9ம் தேதி உண்ணாவிரதம்[2]: “புதிய துடப்பங்கள் நன்றாக பெருக்கும்”, என்றும் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதைப் போல இந்த புதிய அரசியல்வாதி சொல்கிறாரா அல்லது உண்மையாக ஏதாவது செய்யப்போகிறாரா? “குழந்தைகள் கடத்தலை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்,” என, ஐ.ஜே.கே., நிறுவனத் தலைவர் பச்சமுத்து தெரிவித்துள்ளார். ஒரு நாள் உண்ணாவிரதம் என்பதெல்லாம் கேலிக்கூத்து, விளையாட்டு தான்! இதனால், ஒன்றும் நடக்கப் போவதில்லை.

.ஜே.கே., நிறுவனத் தலைவர் பச்சமுத்து அளித்த பேட்டி: “சமீப காலமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தைகள் கடத்தப்பட்டு, கற்பழித்து, பணம் பறிக்கும் நோக்கத்திற்காக கொலையும் செய்யும் வன் செயல்கள் தொடர்கின்றன. குறிப்பாக கோவையைச் சேர்ந்த முஸ்கன், ரித்திக் ஆகியோர் பணம் பறிக்கும் நோக்கத்திற்காக கடத்தப்பட்டு மூர்க்கத்தனமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்”.

ஐந்து மாதங்களில் சென்னையில் மட்டும் 29 கடத்தல் சம்பவங்கள்: “சென்னை வியாசர்பாடியில், 9ம் வகுப்பு மாணவி பொள்ளாச்சிக்கு கடத்தப்பட்டுள்ளான். முகப்பேரில் 9ம் வகுப்பு மாணவன் கீர்த்திவாசன் கடத்தப்பட்டுள்ளான். அரியலூர் காங்கிரஸ் எம்.எல்..,வின் தம்பி குழந்தைகள் உளுந்தூர்பேட்டை தி.மு..,பிரமுகரின் தங்கை மகள் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து மாதங்களில் சென்னையில் மட்டும் 29 கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன”.

குற்றவாளிகளை அரசியல் பின்புலம் கொண்டு விடுவிப்பது முழுமையாக தடுக்கப்பட வேண்டும்: “பாதுகாப்பு கேள்விக் குறியாகும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே உள்ளன. பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் பாதுகாப்பாற்ற இச்சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை அரசியல் பின்புலம் கொண்டு விடுவிப்பது முழுமையாக தடுக்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், உள்துறை சட்டத்தை திருத்தி, சிறப்பு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், வரும் 9ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை .ஜே.கே., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தை நான் துவக்கி வைக்கிறேன்”, இவ்வாறு பச்சமுத்து கூறினார்.

கொலை, கடத்தல் சம்பவங்கள் எதிரொலி : விழிப்படைந்த மாணவர்கள்: பெற்றோர்கள் அதிர்ச்சி, உஷாரான குழந்தைகள்: குழந்தைகள் கடத்தல், கொலை சம்பவத்தால் பெற்றோர், மாணவர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பள்ளி குழந்தைகள் முஸ்கின், ரித்திக்கை கடத்திச்சென்று கொலை செய்த கொடுமை தமிழகத்தை உலுக்கியுள்ளது. இச்சம்பவம் நடந்த சில நாட்களில், சென்னையில் மாணவர் கீர்த்திவாசன் (13) கடத்தப்பட்டு, நேற்று முன்தினம் மீட்கப்பட்டார். இச்சம்பவங்கள், மாணவர், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாகன உரிமையாளர், டிரைவரின் மொபைல் போன் எண், அவர் இல்லாத பட்சத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண் – முதலியவை கேட்டுப் பெற்றனர்[3]: இதுபோன்ற சம்பவம் நமக்கும் அரங்கேறி விடக்கூடாது என எச்சரிக்கை உணர்வு பெற்றோர், மாணவரை விழிக்க செய்துள்ளது. சிவகங்கையில் தனியார் வேன், ஆட்டோக்களில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், டிரைவர், வாகனம் குறித்த விபரங்களை சேகரித்து வருமாறு, குழந்தைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள், டிரைவரிடம் இந்த விபரங்கள் சேகரித்ததை காணமுடிந்தது. குறிப்பாக வாகன உரிமையாளர், டிரைவரின் மொபைல் போன் எண், அவர் இல்லாத பட்சத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை கேட்டு பெற்றனர். இதே போல அனைத்து மாணவர்களும் விழிப்புடன் இருந்தால், பிரச்னைகளை தவிர்க்கலாம். இந்நிலையில், மாணவர்கள் வரும் வாகனங்கள் குறித்த விபரங்களை சேகரிக்குமாறு, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது[4].

சுற்றறிக்கை அனுப்பி வைத்த அரசு அதிகாரி[5]: சமீப காலமாக பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அது போன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.  இது குறித்து நேற்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது[6]:

1. அனைத்து பள்ளி நிர்வாகங்களும் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை உடனடியாக வரவழைத்து அவர்களிடம் பேசி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

2. அப்படி முடிவு செய்யப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெற்றோர், ஆசிரியர்கள் கூடி உறுதி செய்ய வேண்டும்.

3. பள்ளிக்கு மாணவர்கள் எப்படி வருகின்றனர் என்பது குறித்து முழு விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

4. பள்ளி நிர்வாகத்துக்குரிய வாகனங்களின் டிரைவர்களின் விவரங்கள், குடும்ப விவரங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்கள் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

5. பெற்றோர் ஏற்பாடு செய்துள்ள வாகனங்களின் டிரைவர்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மூலமாக தகவல்கள் சேகரித்து அறிந்து வைத்திருக்க வேண்டும்.

6. பள்ளிக்கு வரும் வாகனங்களின் உரிமையாளர்களையும் அழைத்து, அவர்களிடமும் குழந்தைகள் ஏற்றி, இறக்கி விடும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்க வேண்டும். ஓட்டுநர் நியமனம் தொடர்பான நடைமுறைகளையும் பின்பற்ற சொல்ல வேண்டும்.

7. பெற்றோரோ அல்லது அவரது சார்பாக வேறு நபர்களோ மாணவர்களை பள்ளிகளில் கொண்டு விடும்போதும் மாலையில் உரிய நபர்கள் மூலம் திரும்ப வீடு செல்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அழைத்து செல்லும் பெற்றோர் உட்பட அவர்கள் சார்பிலானவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

8. மாணவர்கள் மாலையில் வீடு திரும்பும்போது பள்ளி வாயிலில் 4 ஆசிரியர்களாவது  அமர்த்தி, மாணவர்கள் பாதுகாப்பாக  வாகனங்களில் செல்கின்றனரா என்பதை  கண்காணிக்க வேண்டும்.  உரிய தடங்களில் தான் செல்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

9. காலையில் மாணவர்களை வாகனங்களில் ஏற்றிவிடும் போது, உரிய  வாகனம் தானா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அது போன்று, மாலையில் இறக்கி விடும் போதும், மாணவர்களை பெற்றோர், அவரின் சார்பிலானவர்கள் தான் அழைத்துச்செல்கின்றனரா என்று ஓட்டுநர்களும் உறுதி செய்ய வேண்டும்.

10. அறிமுகம் இல்லாத அல்லது ஓரளவு அறிமுகமுள்ள  நபர்களுடன் கட்டாயம் மாணவ மாணவியர் செல்லக் கூடாது  என்ற  விழிப்புணர்வை அனைத்து மாணவர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

11. கடத்தல் குறித்த சம்பவங்களை வகுப்பில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குறிப்பிட்டு சொல்லி கவனமாக இருக்க அறிவுறுத்த வேண்டும்.

12. வீட்டில் இருந்து தாங்களாகவே பஸ்நிலையம் வரும் மாணவர்கள் அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்றும், அவர்களுடன் செல்லவோ, பேசவோ கூடாது என்றும் மாணவர்கள் தங்கள் குடும்ப விவரங்களை அவர்களிடம் சொல்லக் கூடாது என்றும் அறிவுரைகள் வழங்க வேண்டும்[7].

13.  கல்வி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பள்ளி முதல்வர்கள், போக்குவரத்து துறையினர் கொண்ட கூட்டத்தை கூட்டி பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதித்து தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனரமும் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

வேதபிரகாஷ்

© 05-11-2010


[1] வேதபிரகாஷ், கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழிக்கலாமா, கூடாதா? (1), http://dravidianatheism.wordpress.com/2010/11/03/669-murder-kidnap-rape-ransom/

……………………….(2), http://dravidianatheism.wordpress.com/2010/11/04/modus-operandi-theft-decoity/

……………………….(3), http://dravidianatheism.wordpress.com/2010/11/05/crime-culpability-menrea-criminality/

[2] தினமலர், குழந்தைகள் கடத்தலை தடுக்க தனி சட்டம் .ஜே.கே., சார்பில் 9ம் தேதி உண்ணாவிரதம், நவம்பர் 04, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=120267

[3] தினமலர், கொலை, கடத்தல் சம்பவங்கள் எதிரொலி : விழிப்படைந்த மாணவர்கள், நவம்பர் 04, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=119760

Advertisements