ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை!
ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை[1]: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
தூக்கில் தொங்கிய சாதிக்பாட்சா: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உறவினர்கள் கண்ணீர்– சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு: தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவி ரெஹ்ன பானு சி.பி.ஐ.யைக் குற்றஞ்சாட்டினர். தனது கணவரின் மரணத்திற்கு அவர்கள்தாம் காரணம் என்றார். அவர்களது ரெய்டிற்கு பிறகு அதிக அளவில் மன உளைச்சலிற்கு ஆளானார். மேலும் அவ்விதமாகவே, ஒரு கடிதமும் பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. போலீஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா?! சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த சாதிக்? ராஜாவின் கூட்டாளியாக எவ்வாறு ஆனார்?: பெரம்பலூரில் கரூருக்கு அருகிலுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சர்ட், பேன்ட், புடவைகள் முதலியவற்றை விற்றுவந்தாராம். ஆரம்பத்தில் இளைஞனாக இருக்கும்போது, சைக்கிளில் கூட அலைந்து திரிந்து விற்றானாம். பிறகு சீட்டு வியாபாரம் தொடங்கி, அது வெற்றிகரமாக நடக்காததால், நிலத்தை வாங்கி-விற்கும் புரோக்கர் வேலையில் இறங்கினானாம். அதன் பிறகு 1990களில் ராஜாவின் சினேகிதம் கிடைத்ததும் நிலைமை உய்ர ஆரம்பித்ததாம்[2]. கிரீன் ஹவுஸ் கம்பெனி ஆரம்பித்தபோது, தனது சகோதரன் ஏ.எம். ஜமால் மொஹம்மது மனைவி ரேஹா பானு டைரக்டர்களாக்கப் பட்டனர். ஆனால், மற்றவர்கள் எல்லோருமே ராஜாவின் உறவினர்கள்தாம் – பரமேஸ்வரி, மனைவி; ஆர். ப். ரமேஷ், மூத்த சகோதரி விஜயாம்பாளின் மகன், ஏ. கலியபெருமாள், சகோதரன்; ஆர். ராம்கணேஷ், மைத்துனன்;
லட்சங்களிலிருந்து கோடிகளுக்குச் சென்ற கதை: பந்தாவாக இணைத்தளமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, சாதிக் பாட்சா பிசினஸ் மேனாஜ்மென்டில் முதுகலை படிப்பு கொண்டவராம், 15 வருடம் ரியல் எஸ்டேட் வல்லுனராம் என்றெல்லாம் பிரபலப்படுத்தப் பட்டது. ஆனால், பெரம்பலூரில் இருக்கும் அவரது நண்பர்ளுக்கு நன்றாகவே தெரியும், அவன் எந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றதாக இல்லை. 1984ல் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப் பட்டது. அன்றிலிருந்து அங்கு ரியை எஸ்டேட் வியாபாரம் களைக்கட்டியது. அதில் அங்கிருந்த் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். திமுகவின் ஆதரவுடன் செயல்பட்ட சாதிக் பாட்சாவை அவர்கள் ஊக்குவித்தனர். ராஜாவின் நட்பும் கிடைத்தவுடன், அமோகமாக வியாபாரம் பெருகியது. பெரம்பலூரில் பல நிலங்கள் வாங்கிப் போடப்பட்டன. 2004ல் ஒரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த கம்பெனி 2007ல் பலகோடிகளில் பெருகி, இன்று 600 கோடிகளுக்கு சொந்தமாக, சிங்கப்பூர், ஹாங்ஜாங், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் துணை-அலுவலகங்களைக் கொண்டுள்ளது[3].
பெரம்பலூரில் பாட்ர்சாவின் நெருங்கிய நண்பர்க சொன்ன விவரங்கள்: கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் பெரிய பங்களா ஆள்-அரவம் இன்று கிடந்தது. பிறகு அவரது இறப்பை அறிவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. மக்கள் மெல்ல வந்து, அனுதாபம் தெரிவித்தனர். சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரான என். செல்லதுரை, “தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபரே இல்லை. அவர் மிகவும் நன்றகப் பழகக் கூடியவர், எல்லோரிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர்”, என்றார். தந்தை இறந்தவுடன், சகோதர்களுடன் – ஜாஃபர் அலி மற்றும் ஜமால் மொஹம்மது – பெரம்பலூருக்கு வந்தனர். பாட்சா முதலில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தான். வீடு-வீடாகச் சென்று வேட்டி-சேலை விற்று வந்தான். பிறகு மின்னணு சாதனங்களை விற்க்க ஆரம்பித்தான். தவணைகளில் பணத்தைப் பெற்றுவந்தான்.
தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா: அதிமுகவின் துணை சபாநாயகர் – வரகூர் அருணாசலம் தொடர்பு கிடைத்தது. சிறு-சிறு வேலைகளை பாட்சா அவருக்கு செய்து வந்தான். அப்பொழுது தான், வக்கீலாக வேலை பார்த்து வந்த ஏ. ராஜா, பாட்சாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. சாதிக் ரியல் எஸ்டேட் என்ற கம்பெனியைத் தொடங்கினான். 1998ல் ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்பொழுதுதான், இருவரும் நெருக்கமானார்கள். திருச்சி, திண்டுகல், கர்ருர் முதலிய பகுதிகளில் பாட்சா தனது வியாபாரத்தைப் பெருக்கினான்[4]. இந்நிலையில் ராஜா அவருக்கு உதவியதாகத் தெரிகிறது[5]. ஆக மிகவும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா.
மர்மமான முறையில் தற்கொலை: தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஏன் தாமதமாக புகார் செய்யப் பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.
டில்லியில் பரபரப்பு– அரசியல் கட்சிகள் பலவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டன: சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி[6]: இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஷாகித் பல்வா தான் சாதிக் பாட்சாவைப் பற்றி சி.பி.ஐ.யிடம் சொல்லியுள்ளார்: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார். ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார். இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்டில் கிடைத்த ஆதாரங்கள் என்ன – எதைக் கண்டு பாட்சா பயந்தார்? சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். “கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
ஷாகித் பல்வாவுடனும் நட்பு ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த சாதிக் பாட்சா: இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார். தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுடனும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.
தெற்காசிய முதலீடுகளின் ரகசியம் என்ன? இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாமலேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மர்மமான முறையில் சாதிக் பாட்சா இறப்பு (16-06-2011): சுப்ரமணிய சுவாமி ராஜாவுக்குத்தான் ஆபத்து ஏற்படும் என்பது போல சூசகமாக சொல்லியிருந்தார். ஏனெனில் 2-ஜி விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் ராஜாவுக்கு எல்லாமே தெரியும் என்பது அவரது வாதம். அவரையும் பத்திரமாக கைது செய்து கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்து விட்டாகிவிட்டது. இந்நிலையில், அவரது கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவது வியப்பாக உள்ளது. போலீஸ் வந்து பார்த்தபோது, மூன்று/ நான்கு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளாதாக அறிவிக்கின்றனர். அவற்றின் விவரங்கள் முழுமையாக வெளியிடவில்லை.
வேதபிரகாஷ்
17-03-2011
[1] தினமலர், ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை, பதிவு செய்த நாள் : மார்ச் 16, 2011,14:26 IST; மாற்றம் செய்த நாள் : மார்ச் 16,2011,18:02 IST;
[2] http://www.indianexpress.com/news/rise-and-fall-of-batcha-from-selling-shirts-to-owning-real-estate-firms/763513/
[4] http://timesofindia.indiatimes.com/city/chennai/Old-friends-of-Batcha-remember-a-calm-and-confident-man/articleshow/7722938.cms
[5] http://economictimes.indiatimes.com/news/news-by-industry/et-cetera/who-was-batcha-and-what-did-he-know/articleshow/7724922.cms
[6] தினமலர், தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம்? சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=207026